இந்திய போலி அழைப்பு நிலையத்திலிருந்து 92 இந்தோனீசியர்கள், 72 மலேசியர்கள் மீட்பு

மலேசியர் ஒருவர் கைது, மீட்கப்பட்டோர் தாயகம் திரும்ப ஏற்பாடு

இந்திய போலி அழைப்பு நிலையத்திலிருந்து 92 இந்தோனீசியர்கள், 72 மலேசியர்கள் மீட்பு

கோப்புப் படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

27 Nov 2026 - 4:19 pm

2 mins read

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி அனைத்துலக அழைப்பு நிலையத்திலிருந்து 164 இந்தோனீசிய, மலேசிய நாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் அவர்கள், அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என மூத்த காவல்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தெரிவித்துள்ளனர்.

ஆள்கடத்தல் கும்பலால் இணையவழி அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்பதால், அரவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.

ய்டாவில் உள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இயங்கிய போலி அழைப்பு நிலையத்தில் டெல்லி காவல்துறையின் குற்றப் பிரிவு புதன்கிழமை (நவம்பர் 25) இரவு நடத்திய அதிரடிச் சோதனையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

திட்டத்தை வழிநடத்திய 25 வயது மலேசியரான டான் குவான் வெய் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக உள்ள சுனில் குமார், சுஷில் குமார் ஆகிய இரு இந்தியர்களுக்காக அவர் செயல்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் மலேசியாவில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் இணை ஆணையர் சுரேந்தர் குமார் தெரிவித்தார்.

“
தரமற்ற உணவு வழங்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களைப் பேசி தங்கள் நாட்டு மக்களை ஏமாற்ற அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய காவல்துறை

வேலைவாய்ப்பு ஆசைகாட்டி, கடந்த நான்கு மாதங்களில் வணிக விசாக்களில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சோதனையில் 95 இந்தோனீசிய, 79 மலேசிய கடப்பிதழ்கள் என மொத்தம் 174 கடப்பிதழ்கள் மீட்கப்பட்டன. 164 பேர் மீட்கப்பட்டு ஒருவர் கைதான நிலையில், எஞ்சியுள்ள ஒன்பது பேரைக் கண்டறியும் பணி தொடர்கிறது.

மாதம் 12.24 லட்சம் ரூபாய் வாடகையில் எடுக்கப்பட்ட ஆறு மாடிக் குடியிருப்பில் 65 அறைகளில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

தரமற்ற உணவு வழங்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களைப் பேசி தங்கள் நாட்டு மக்களை ஏமாற்ற அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘சென்ட்ரிக்ஸ்’ (Zenttrix), ‘குவாண்ட்வோரோ’ (Quantvoro) போன்ற போலி செயலிகள், இணையத்தளங்கள் மூலமும், சமூக ஊடகங்களில் போலிப் பெண் கணக்குகளை உருவாக்கியும் முதலீட்டு மோசடிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியிவந்துள்ளது.

மருத்துவப் பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இரு நாட்டுத் தூதரகங்களின் ஒத்துழைப்புடன் அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்