தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவசமாக விசா கிடைத்தால் வெளிநாட்டு வேலைக்கு 92% இளையர்கள் தயார்

2 mins read
e23a58f3-75a9-4050-97cc-dd7c3a52e265
நம்ப முடியாத முகவர்கள் போன்ற பிரச்சினைகளை பலர் எதிர்நோக்குகின்றனர். - மாதிரிப்படம்: novoresume.com / இணையம்

புதுடெல்லி: இலவசமாக விசா வழங்கப்பட்டு தகுந்த பயிற்சி தந்து ஆதரவளிக்கப்படும் பட்சத்தில் 10ல் ஒன்பது இந்திய இளையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தயார் என்று திங்கட்கிழமை (ஜூன் 14) வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

போதுமான வழிகாட்டுதல் இல்லாதது, நம்பிக்கை சம்பந்தப்பட்ட சிக்கல்கள், நம்பகமான வளங்களைப் பெற முடியாதது ஆகியவை உலகப் பொருளியலில் திறனாளர்களுக்கு இடையூறாக இருந்துவரும் அம்சங்கள். குறிப்பாக குடிநுழைவு தொடர்பான மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தச் சூழல் நிலவுவதாக செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும், திறனாளர்களைக் கையாளும் தளமான டெர்ன் (TERN) குழுமம் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்தாய்வில் பங்கேற்றோரில் 57 விழுக்காட்டினருக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை எப்படித் தொடங்குவது என்பது தெரியவில்லை.

வேலை தொடர்பில் வழிகாட்டுதல் போன்ற அம்சங்களில் குறைபாடுகள் இருப்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. நம்ப முடியாத முகவர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆள்சேர்ப்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தங்களால் நம்பி இறங்க முடியவில்லை என்று ஆய்வில் பங்கேற்ற 34.60 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

பொதுவாக நாணயமற்ற, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதன் தொடர்பிலான சேவைகளை வழங்குவோர் அதிக கட்டணம் கேட்பதுண்டு. அதனால் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய தேவை இருக்கும்போது வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தாங்கள் விரும்புவதில்லை என்று ஆய்வில் பங்கேற்ற 27 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

வெளிநாடுகளில் வேலை தேடிக்கொள்வதற்கு மொழி தொடர்பான ஆதரவு கிடைப்பதையே ஆக முக்கியமானதாக 36.5 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.

“உலகளவில் பெரிய லட்சியங்களைக் கொண்ட ஆக இளம் ஊழியர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர். எனினும், மில்லியன்கணக்கானோருக்குத் தொடர்ந்து உலகளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடைமுறைகளின் பல கட்டங்களில் உள்ள கவனிக்கப்படாத சவால்களே இந்தப் பிரச்சினைக்கு அடித்தளமாக இருக்கிறது. ஒழுங்கற்ற முகவர்களும் வேலைக்கு ஆள் எடுப்பவர்களும் அளவுக்கதிகமான கட்டணம் பெற்று வேலைக்கு விண்ணப்பிப்போரை ஏமாற்றுவது அத்தகைய சவால்களில் அடங்கும்,” என்றார் டெர்ன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவினாவ் நிகம்.

“உலக வேலையிடங்களில் சேர்ந்துகொள்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளப் போதுமான திட்டங்கள் வழங்கப்படாதது இளையர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவாலாகும்,” என்றும் திரு நிகம் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பராமரிப்பு, தளவாடம், பொறியியல், போன்ற தேவை அதிகம் இருக்கும் துறைகளைச் சேர்ந்த 2,500 பேரைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்