https://www.newindianexpress.com/nation/2025/Apr/07/94-blazes-in-11-days-jk-battles-forest-fire-surge
ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த 11 நாள்களில் 94 காட்டுத்தீச் சம்பவங்கள் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த வட்டரத்தில் சுற்றுப்புறப் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை தலைதூக்கியுள்ளது. அதிகரித்துள்ள காட்டுத்தீச் சம்பவங்கள், ஜம்மு காஷ்மீரின் பலதரப்பட்ட உயிரினங்களுக்கு அபாயம் விளைவிப்பது மட்டுமின்றி உள்ளூர் சமூகங்கள் மற்றும் உள்கட்டமைப்பின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 3ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீரில் 94 காட்டுத்தீச் சம்பவங்கள் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களில் 15ல் காட்டுத்தீ மூண்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது.
இம்மாதம் இரண்டாம் தேதிதான் ஆக அதிகமான காட்டுத்தீச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அன்றைய தினம் 35 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு அடுத்த நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதியன்று 18 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாயின.
காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள அனந்தாங் மாவட்டம்தான் ஆக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியது. அங்கு கிட்டத்தட்ட தினமும் காட்டுத்தீ மூண்டிருக்கிறது. புல்வாமா, பட்கம், கண்டெர்பால், பாண்டிபோரா ஆகியவற்றிலும் காட்டுத்தீ மூண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ஜம்முவின் ரஜூரி, ராம்பான், ரியாசி, டோடா, பூஞ்ச் ஆகியவற்றிலும் காட்டுத்தீ மூண்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையம் இரண்டு காட்டுத்தீ எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அவற்றில் ஒன்று, வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வரை நடப்பில் இருக்கும்.
அதன்படி புர்மண்டல், கத்துவா ஆகியவற்றுக்கு அருகே காட்டுத்தீ மூளும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.