இந்தியாவில் 9,400 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் 9,400 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

1 mins read
392dfa6f-2a2b-45ed-be08-9f5ba71b28fc
மேலும் பல நவீன பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. - சித்திரிப்புப்படம்: ஹெட் டி டெக்

புதுடெல்லி: இந்தியாவில் 9,400 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மின்னிலக்க மோசடி வழக்குகள் அதிகரித்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மின்னிலக்க கைது என்ற பெயரில் ஏராளமானோர் மோசடிக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 12 வார காலத்திற்குள் இத்தகைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருந்து இயக்கப்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கம்போடியாவில் இருந்து அதிக கணக்குகள் இயக்கப்படுவதாக தனது விசாரணையில் தெரியவந்துள்ளது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

மின்னிலக்க மோசடி தொடர்பில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் 3,800 வாட்ஸ்அப் கணக்குகளை இந்திய அரசு அடையாளம் கண்டு அந்நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில், வாட்ஸ்அப் இந்த விசாரணையை மேலும் விரிவுபடுத்தி மிகப்பெரிய மோசடி வலையமைப்பைக் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, மேலும் நூற்றுக்கணக்கான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேலும் பல நவீன பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் சுய விவரக் குறிப்புகளில் காவல்துறை, அரசு சின்னங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும் நடவடிக்கையிலும் அந்நிறுவனம் இனி கவனம் செலுத்தும்.

மேலும், புதிதாகத் தொடங்கப்படும் கணக்குகளில் இருந்து பல பயனாளர்களுக்கு அழைப்புகள் வரும்போது உரிய எச்சரிக்கைகளை வழங்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்