புதுடெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பல நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது அந்நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மொத்தம் ரூ.944 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் விமான நிறுவனத்துக்கு ஒரு அறிவிப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
இதுபோன்ற அறிவிப்புக் கடிதங்களை வருமான வரித்துறை அனுப்புவது வழக்கமான நடைமுறைதான்.
கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான வருமான வரியை கணக்கிடுவது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வருமான வரித்துறை ஆணையரிடம் தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும் இதுதான் அந்நிறுவனம் அதிர்ச்சி அடையக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், அந்த முறையீடு இன்னும் விசாரணையில் உள்ளது. இறுதி உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை.
“வருமான வரித்துறையின் இந்த அபராத விதிப்பை எதிர்த்து சட்ட ரீதியில் போராட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், இதனால், நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள், வணிக நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளித்துள்ளது.
2025ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் தனது நிகர லாபம் 18.6% குறைந்துவிட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
செலவுகள் அதிகரித்ததன் காரணமாக லாபம் குறைந்ததாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.