பாட்னா: பீகார் மாநில மக்கள் பலன் பெறும் வகையில், ரயில்வே துறையை மேம்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.95,566 கோடியை முதலீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இம்மாநிலத்தில் உள்ள 98 ரயில் நிலையங்களில் மறுகட்டமைப்புப் பணிகள் நடந்து வருவதாகவும் ரயில்வே துறையை மின்மயமாக்கும் பணிகளில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பீகார் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் பிரதமர் மோடி, அதன் வளர்ச்சிப் பணிகள் மீது எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார்.
“பீகாரின் ரயில்வே துறையை 100% அளவுக்கு மின்மயமாக்கம் செய்வதற்கான பணிகளில் பிரதமர் மோடி அரசு தற்போது இறங்கியுள்ளது.
“ரயில் வழித்தடங்களை இரட்டிப்பாக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கான பலனை பீகார்வாசிகள் பெறுவார்கள்,” என்று கூறினார்.
அமர்ந்து செல்லும் வசதியுடன் 136 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக இவ்வாண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்த அவர், இந்த ரயில்களில் 100% அளவுக்கு பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.