தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்: திரிணாமூல் காங்கிரஸ்

2 mins read
29c002ef-2c33-4314-be5b-5b74e8710ebc
அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டுவதற்கு விசாரணை நடத்தப்படுவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிக அளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தெரிவித்தார்.

மே 1ஆம் தேதி அமலாக்கத் துறை நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீன் கூறுகையில், “2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகுதான் அமலாக்கத் துறையில் அதிகளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முன்னர் வரை பணமோசடிச் சட்டங்கள் பயனற்றதாகவே இருந்தன,” என்றார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தமது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் 98 விழுக்காடு வழக்குகள் எதிர்க்கட்சியினருக்கு எதிரானவையே. மீதமுள்ள 2 விழுக்காடு வழக்குகள் பாஜகவுடன் சேர்ந்தவர்கள்மீது தொடுக்கப்பட்டு உள்ளது,” என்று அந்தப் பதிவில் கூறினார்.

மேலும் அந்தப் பதிவில், “அமலாக்கத்துறை வழக்குகளில் விசாரணை என்பதை ஒரு செயல்முறை தண்டனையாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டுவதற்கும் பாஜக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கும்தான் விசாரணை செயல்முறை பயன்படுத்தப்படுகிறது’’ என்றும் சாகேத் கோகலே குறிப்பிட்டுள்ளார்.

“மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அமலாக்க வழக்குகள் அதிகரித்தது உண்மைதான். மேலும், கடந்த 11 ஆண்டுகளில் அமலாக்கத் துறைக்கு எதிராக 5,297 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், 47 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர்.

“அமலாக்கத் துறை வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 0.7 விழுக்காடு மட்டுமே. தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு 1,000 வழக்குகளில், 7 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் நிரூபிக்கப்படுகின்றனர். 1000 பேரில் 993 பேர் தவிர்த்து, 7 பேரை மட்டுமே சிறையில் அடைக்க அமலாக்கத் துறை முன்வருகிறது,” என்றும் சாகேத் கோகலே தமது பதிவில் தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்