ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் நம்பகமான ஆவணங்கள் அல்ல: தேர்தல் ஆணையம்

ஆதார் அட்டையும் வாக்காளர் அட்டையும் நம்பகமான ஆவணங்கள் அல்ல: தேர்தல் ஆணையம்

2 mins read
a319a210-371c-48d3-bc41-aa9bd148c522
ஆதார் என்பது குடியுரிமை பெற்றதற்கான ஆதாரம் அல்ல. வெறும் அடையாள அட்டை மட்டுமே என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) போன்றவற்றை வெறும் அடையாளச் சான்றாக மட்டுமே கருத முடியும் என்றும் அவை நம்பகமான ஆவணங்கள் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கவே தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்தப் பத்திரத்தில், “வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியற்ற நபர்களின் பெயர்களை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்களிக்க குடியுரிமை, வயது, இருப்பிடச் சான்று அவசியம். அந்த சான்றுகள் இல்லாதவர்கள் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள்.

“ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான ஆவணங்களில் சேர்க்க முடியாது. அவற்றை வெறும் அடையாள சான்றாக மட்டுமே கருத முடியும்.

“ஆதார் என்பது குடியுரிமை பெற்றதற்கான ஆதாரம் அல்ல. மேலும், குடும்ப அட்டைகளை பலர் முறைகேடாகப் பெற்றுள்ளனர்.

“எனவே, அவற்றையும் வாக்காளர் அடையாள அட்டையையும் நம்பகமான ஆவணங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது,” என்று தேர்தல் ஆணையம் விளக்கி உள்ளது.

வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டாலும், பீகார் தேர்தல் வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கு வாய்ப்புத் தரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கு மீண்டும் திங்கட்கிழமை (ஜூலை 28) விசாரணைக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்