புதுடெல்லி: ஆதார் அடையாள அட்டையைக் குடியுரிமையை உறுதி செய்வதற்கான ஆவணமாகக் கருத இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றமும் இதே போன்ற ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அப்போது, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஆதார், ரேசன் அட்டை ஆகிய ஆவணங்களை குடியுரிமைக்கான சான்று ஆவணமாக ஏற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பேரளவில் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம், ஆதார் அடையாள அட்டையை, இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கான, நம்பகமான ஆவணமாகக் கருத இயலாது எனத் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் விளக்கியுள்ளது.
ஏராளமான போலி ஆவணங்கள் புழக்கத்தில் இருப்பதாக அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, பங்ளாதேஷ் குடிமக்கள் இத்தகைய போலி ஆவணங்களைப் பெற்று இந்தியாவில் தங்கியிருப்பதும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருப்பதாலேயே ஒருவரை இந்தியக் குடிமகனாகக் கருத முடியாது என்றும் இவை வெறும் அடையாள ஆவணங்களே என்றும் தீர்ப்பளித்ததை தேர்தல் ஆணையத் தரப்பு தனது வாதத்தில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்பதாக தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.