தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தேர்தல் ஆணையத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆதார் அட்டையைச் செல்லத்தக்க ஆவணமாக ஏற்கவேண்டும்

2 mins read
b5a2a0f0-d908-47b0-bbea-d3bd0189d530
வாக்காளர் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டையையும் ஏற்கத்தக்க ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின்போது ஆதார் அட்டையைச் செல்லத்தக்க ஆவணமாக ஏற்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்கள் சரிபார்ப்பிற்காகச் சமர்ப்பிக்கக்கூடிய அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் செல்லத்தக்க ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையானது உரிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி வாக்காளர்களின் பெயர்களைத் தன்னிச்சையாக நீக்க அனுமதிப்பதால் அது ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்கக்கூடும் என்றும் அதன்மூலம் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் மனுதாரர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ள விரும்புவோர் அந்த 11 ஆவணங்களில் ஒன்றையோ அல்லது ஆதார் அட்டையையோ சமர்ப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையின்போது 6.5 மில்லியன் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

தங்களுக்கு வாக்களிப்போரைக் குறிவைத்து அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் பலவும் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஏன் உதவவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“அரசியல் கட்சிகள் தங்கள் வேலைகளைச் செய்வதில்லை,” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் கண்டிப்பாக வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்,” என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எம்எல்ஏ, எம்.பி. போன்ற தனிப்பட்டவர்களே எதிர்ப்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் கட்சிகளிடமிருந்து வரவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்