லூதியானா: பஞ்சாப்பில் துப்பாக்கியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் எம்எல்ஏ குர்பிரீத் கோகி உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரின் மேற்குத் தொகுதிக்கான ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருப்பவர் குர்பிரீத்.
இவர், வெள்ளிக்கிழமை அன்று (ஜனவரி 10) வீட்டில் இருந்தபடி தனது துப்பாக்கியைத் துடைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது, குர்பிரீத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இணை காவல் ஆணையாளர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறும்போது, “துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கிடந்த குர்பிரீத்தை டிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“58 வயதாகும் குர்பிரீத்துக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இரண்டு முறை கவுன்சிலராக இருந்த குர்பிரீத், கடந்த 2022ல் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து எம்எல்ஏவின் உறவினர்கள் கூறுகையில், “இரவு நேரத்தில் தனியாக தனது அறையில் அமர்ந்து துப்பாக்கியை எம்எல்ஏ துடைத்துக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது,’’ என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததா அல்லது தனது உயிரை அவர் மாய்த்துக்கொண்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
இரவு பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

