புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறிவிட்டது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சி, கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமே அக்கூட்டணியில் இணைந்ததாகக் கூறியது.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா, பாஜகவும் காங்கிரசும் திரைக்குப் பின்னே ரகசியக் கூட்டணி வைத்திருப்பதாகச் சாடியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக நன்மை பயக்கும் விஷயங்களை மட்டுமே ராகுல் செய்வதாகவும் இதன் மூலம் ராகுல், சோனியா குடும்பங்கள் சிறைக்குச் செல்லாமல் பிரதமர் மோடியால் காப்பாற்றப்படுவதாகவும் அனுராக் தண்டா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் அரசியலைச் சுத்தப்படுத்த, திரைக்குப் பின்னால் கூட்டணி வைத்துள்ள இந்தக் கட்சிகளின் கூட்டுச்சதியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
“ராகுலும் மோடியும் மேடைகளில் வேண்டுமானால் எதிரிகளாகத் தோன்றலாம். அரசியலில் நீடிக்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து உத்தரவாதம் அளிப்பவர்களாக மாறிவிட்டனர்.
“மக்களுக்குத் தேவையான கல்வி, இட ஒதுகீடு, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நாட்டு மக்களுக்கு தருவதில் இருவருமே ஆர்வம் காட்டவில்லை.
“கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை பாஜக மூடி மறைக்கிறது,” என்று அனுராக் தண்டா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.