தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

30 ஆண்டுகளுக்குமுன்பு சிறுவனாக கடத்தப்பட்டவர் இளையராக மீட்பு

2 mins read
ab9d5032-832e-4537-9666-37d82f9f9fa6
பீம் சிங் சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ஏஎன்ஐ

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 1993ஆம் ஆண்டு சிறுவனாகக் கடத்தப்பட்டவர் குடும்பத்தினருடன் 30 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றிணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் பகுதியில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை சில நாள்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவர் மீட்டார். அவர் எடுத்த முயற்சியால் இன்று பீம் சிங் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளார்.

ஜெய்சல்மர் கிராமத்தில் கால்நடைப் பண்ணையில் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் பீம் சிங் மீட்கப்பட்டார்.1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுவனைக் கடத்திச் சென்றவர்கள், அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை. காவல்துறையினரும் குடும்பத்தினரும் அவரைத் தேடியுள்ளனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.

கடத்திச் சென்றவர்கள் கால் நடைப் பண்ணை முதலாளி ஒருவரிடம் சிறுவனை விற்றனர். ஆடு, மாடுகளுடன் சேர்ந்து பீம் சிங் அப்பண்ணையில் வளர்ந்தார். அவரது தந்தை ஓய்வுபெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் மகன் தொலைந்த இடத்திலேயே மாவு மில் தொடங்கி மகனை தேடி வந்தார்.

நவம்பர் 26ஆம் தேதி காசியாபாத் காவல்நிலையத்திலிருந்து பீம் சிங்கின் தந்தைக்கு அவருடைய மகன் கிடைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்தவர்கள் தங்கள் மகனை அடையாளம் கண்டு, ராஜி எனச் செல்லமாக அழைத்தனர்.

“பீம் சிங், தொழிலதிபர் ஒருவர் எழுதிக்கொடுத்த பரிந்துரைக் கடிதத்துடன் இங்கு வந்தார். அவரது குடும்பத்தைப் பற்றிய சில தகவல்களை பீம் சிங் சொன்னார். தன்னை 1993ஆம் ஆண்டு சிலர் கடத்திச் சென்றதாகக் கூறியதையடுத்து, அதுகுறித்த வழக்கு ஆவணங்களைக் காவல்துறையினர் தேடினர். அதிலிருந்த தகவலை வைத்து அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது,” எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எப்போதும் கால்நடைகளுடன் இருந்தவர் ஒரு நாளைக்கு ஒரு துண்டு ரொட்டியும் சில கோப்பை தேநீர் மட்டும் அருந்தி உயிர் வாழ்ந்ததாக பீம் சிங் தனது கடந்த வாழ்க்கை குறித்து மிகவும் வேதனையுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்