புதுடெல்லி: இந்திய விமானப் படையிலிருந்து கேப்டன் அபிநந்தன் வர்தமான் விலகியுள்ளார். அவர் தனியார் விமான நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் கொல்லப்பட்டனர்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அதையடுத்து, இரு நாட்டுப் போர் விமானங்களுக்கு இடையே தாக்குதல் நடந்தது. அப்போது, பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான் சுட்டு வீழ்த்தினார்.
அதேவேளையில், அபிநந்தனின் போர் விமானம் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட நிலையில், அவர் காயத்துடன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.
இதையடுத்து மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் போர் விமானத்தை வீழ்த்தியதற்காக, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது பெரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது அபிநந்தனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில், 43 வயது அபிநந்தன், ஃப்ளை91 என்ற தனியார் விமான நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிகாரபூர்வமாக அபிநந்தன் தரப்பிலோ அல்லது ஃப்ளை91 நிறுவனம் தரப்பிலோ எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஃப்ளை91 நிறுவனம், தற்போது 6 ஏடிஆர் 71-600 ரக விமானங்களுடன் கோவா, ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


