மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, குஜராத்தின் ஆனந்த் மாவட்டம், வசாத் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 5) ஏற்பட்ட விபத்தில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
மாஹி ஆற்றின் அருகே அடித்தள வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இரும்பு, கான்கிரீட் கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரந்தூக்கிகள், அகழ்பொறிகள் உதவியுடன் உள்ளூர் தொண்டூழியர்கள், மாநில நிர்வாகம், காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டன.
“மூன்று ஊழியர்கள் இறந்துவிட்டனர். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,” என்று ஆனந்த் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் ஜசானி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.