புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் கட்டிமுடிக்கப்படாத பாலம் ஒன்றிலிருந்து கார் விழுந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தில் ஆடவர் மூவர் மாண்டனர்.
கூகல் மேப்ஸ் தளத்தில் உள்ள வரைபடத்தை வழிகாட்டியாகக் கொண்டு அவர்கள் பயணம் செய்ததால் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காரில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் திருமண நிகழ்வைக் காணச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கூகல் மேப்ஸ் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இந்திய அதிகாரிகளுடன் தாங்கள் விசாரணையில் ஒத்துழைப்பதாக கூகல், செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 26) சொன்னது.
சம்பந்தப்பட்ட காரில் இருந்தோர் உத்தரப் பிரதேச மாநிலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பயணத்தின்போது அந்த கார், ஞாயிற்றுக்கிழமையன்று கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து ராம்கங்கா ஆற்றுக்குள் விழுந்தது.
காரை ஓட்டியவர் வழியைத் தெரிந்துகொள்ள கூகல் மேப்ஸ் வரைபடத்தைப் பயன்படுத்தினார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையடுத்து கூகல் மேப்ஸ் செயலிக்கான ஊழியர்களில் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் என்று இந்தியாவின் பிடிஐ (PTI) ஊடகம் தெரிவித்தது. அந்நபரின் பெயர் வெளியிடப்படவில்லை என்று பிடிஐ குறிப்பிட்டது.
மாண்டோரின் குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகவும் கூகல் பேச்சாளர் ஒருவர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

