மும்பை உறியடி நிகழ்ச்சியில் விபத்து; இருவர் உயிரிழப்பு

மும்பை உறியடி நிகழ்ச்சியில் விபத்து; இருவர் உயிரிழப்பு

2 mins read
540f29b2-345e-48a9-8521-0f993c9cd299
கடவுள் கிருஷ்ணனின் பிறப்பைக் குறிக்கும் ஜன்மாஷ்டமி பண்டிகையின் ஓர் அங்கமாக, தயிர் ‘ஹண்டி’ நிகழ்ச்சி, மாநிலம் முழுவதும் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. - கோப்புப் படம்: என்டிடிவி
Google News Preferred Icon

மும்பை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மும்பையில் கோவில் திருவிழாவில் தயிர்ப் பானை உறியடி நிகழ்ச்சி இடம்பெற்றது. அப்போது நேர்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துவிட்டனர். மேலும், மனித ‘பிரமிடு’கள் அமைக்கும் முயற்சியில் 212 பேர் காயம் அடைந்தனர்.

கடவுள் கிருஷ்ணனின் பிறப்பைக் குறிக்கும் ஜன்மாஷ்டமி பண்டிகையின் ஓர் அங்கமாக, தயிர்ப் பானை உறியடி நிகழ்ச்சி, மாநிலம் முழுவதும் பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘கோவிந்தாக்கள்’ எனப்படும் பங்கேற்பாளர்கள், அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட, தயிர் நிரம்பிய மண்பானைகளை உடைப்பதற்காக, பல அடுக்கு மனிதப் பிரமிடுகளை உருவாக்குவார்கள்.

இந்நிலையில், மும்பை மால்வானி பகுதியில் சிறுவர்கள் சிலர் உறியடி திருவிழாவைக் கொண்டாடினர். அப்போது கயிற்றின் ஒரு முனையை மரத்திலும் மற்றொரு முனையைச் செங்கல் தூணிலும் கட்டியிருந்தனர்.

பானையை உடைக்க முயன்றபோது திடீரெனத் தூண் இடிந்து விழுந்ததில், ஏழு வயதான ருத்ரா கதம் என்ற சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தான்.

மற்றொரு நிகழ்வாக, புனே பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உறியடி நிகழ்வு முடிந்து ஒலிபெருக்கி அமைப்புகளைப் பிரித்தெடுக்கும் பணியின்போது, இரும்புச்சட்டம் சரிந்து விழுந்ததில் சல்மா என்ற பெண் மாண்டார்.

மும்பை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது 168 பேரும் தானே நகரில் 44 பேரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உறியடி விழாக்களில் சாதனைகளைப் படைப்பதைவிடப் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்க வேண்டும் எனத் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையின் வோர்லி, தாதர், காட்கோபர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தயிர் பானை உடைக்கும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அவர், இளையர்கள் போதைக்கு அடிமையாவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்தக் கொண்டாட்டங்கள் மாநிலத்தின் ‘போதைப்பொருள் இல்லாத மகாராஷ்டிரா’ பிரசாரத்தை வலுப்படுத்த உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மும்பைதயிர்விளையாட்டுஉயிரிழப்பு