புதுடெல்லி: இந்தியாவில் 2023ல் சாலை விபத்துகளில் 170,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதன்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 474 பேர் உயிரிழந்தனர் அல்லது கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு மரணம் நிகழ்ந்தது. மத்திய அரசாங்கத்தால் ஆளப்படும் மாநிலங்கள் பகிர்ந்த தரவில் இது தெரியவந்துள்ளது.
விபத்துகளுக்கான காரணத்தைக் கண்டறியவும் இப்பிரச்சினையின் அளவை மதிப்பிடவும் சாலை விபத்துகள் குறித்து தேசிய அளவில் தரவுகளை அரசாங்கம் தொகுக்கத் தொடங்கியதிலிருந்து, ஓராண்டில் ஆக அதிகமானோர் உயிரிழந்திருப்பது 2023ல்தான்.
விபத்துகளில் காயமடைந்தோர் குறித்த தரவுகளும் அதில் அடங்கும். 2023ல் கிட்டத்தட்ட 463,000 பேர் விபத்துகளில் காயமுற்றனர். 2022ல் இருந்ததைவிட இது 4 விழுக்காடு அதிகம்.
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம் உள்ளிட்ட குறைந்தது 21 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 2022ஐ விட கூடுதலாகப் பதிவானது.