தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கைக்குழந்தையுடன் பணியில் இருந்த பெண் அதிகாரிக்குக் குவியும் பாராட்டு

1 mins read
f7d992c9-e445-4e67-b80b-f7b72287fb03
கூட்ட நெரிசலையும் கைக்குழந்தையையும் சமாளித்தவாறு பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி, இணையத்தில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். - படங்கள்: எக்ஸ்

புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரி ஒருவர், கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தபடி தமது பணியில் கருத்தாய் இருக்கும் புகைப்படமும் காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ரீனா என்ற அந்தப் பெண் அதிகாரிக்கும் காஷ்மீரில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் அவரின் கணவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு ஆண் குழந்தை மூன்றாவதாகப் பிறந்தது. அதனால், ரீனா விடுப்பில் இருந்தார்.

கடந்த 15ஆம் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் சிக்கி உயிரிழந்த நிலையில், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி விடுப்பில் இருந்த ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு வருமாறு ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தமது ஒரு வயது கைக்குழந்தையை தம் உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்ட ரீனா, பணியில் ஈடுபட்டார். ஒரு கையில் குழந்தை, மறு கையில் லத்தி என அங்கும் இங்குமாக அவர் நடந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டார்.

இந்தக் காட்சியைப் பலரும் புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

“இது எனக்கு வழக்கமானதாகிவிட்டது. குழந்தை பாதிக்கப்படக்கூடாது. குழந்தையைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள ஒருவர் கிடைக்கும் வரை இப்படியே பணி செய்ய வேண்டியுள்ளது,” என்றார் அதிகாரி ரீனா.

குறிப்புச் சொற்கள்