இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்குத் தடை

1 mins read
f16869ca-e357-4f58-8dfd-496bbec56b35
சில சமூக ஊடகப் பிரபலங்களும் அவர்களுடன் தொடர்புடைய யூடியூப் அலைவரிசைகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகத் தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மே 8ஆம் தேதிக்குள் இத்தகைய சமூக ஊடகங்களைத் தடை செய்ய நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலையடுத்து சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவற்றுள் சில தரப்பினர் இந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

சில சமூக ஊடகப் பிரபலங்களும் அவர்களுடன் தொடர்புடைய யூடியூப் அலைவரிசைகளும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இத்தகையவர்களின் செயல்பாடுகள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக நாடாளுமன்றத் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்தே குறிப்பிட்ட சில சமூக ஊடகங்களை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

“பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களும் சிலரும், சில சமூக ஊடகத் தளங்களும் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவது கவலை அளிக்கிறது,” என்று நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 8ஆம் தேதிக்குள் மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் ஒளிவழிக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது மேலும் பல ஒளிவழிக்கு தடை விதிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையைத் தூண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சமூக ஊடக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்