சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 36,000 ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள பெரிய ஆறுகளில் தடுப்பணை கட்டினால் கடலில் கலக்கும் நீரை தடுப்பதோடு தண்ணீரைச் சேமிக்கவும் முடியும். அவ்வாறு தண்ணீரைச் சேமிக்க ஏரிகளைத் தூர்வார்வது அவசியம்.
“தமிழகத்தில், 35 பெரிய ஆறுகள் உள்ளன. இவற்றில் தடுப்பணைகள் கட்டினால், மழையால் கிடைக்கும் 100 டிஎம்சி நீரைச் சேமிக்கலாம். கர்நாடகா, கேரளா, ஆந்திரா என அண்டை மாநிலங்களிடம் தண்ணீருக்காகக் கையேந்த வேண்டியதில்லை.
“ஒரு காலத்தில் நமது மாநிலத்தில் 42,000 ஏரிகள் இருந்தன. தற்போது அவை 27,000 ஏரிகளாகக் குறைந்துவிட்டன. அவற்றைத் துார்வாரினால் 150 டிஎம்சி நீரைச் சேமிக்கலாம். இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது,” என்று சவுமியா அன்புமணி பேசினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “கடந்த காலங்களைவிட நீர்வளத்துறைக்கு அதிக நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். தனியார் பங்களிப்புடன் ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“சென்னையில் அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள 22 ஆயிரம் ஏரிகள், நீர்வளத் துறையில் உள்ள 14 ஆயிரம் ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சவுமியா அன்புமணி, “விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மானியங்கள் முறையாக விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை என்று அரசு அதிகாரிகளின் மீதும் விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
“தருமபுரி மாவட்டத்துக்கு காவிரி உபரி நீரைக் கொண்டு வரவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்,” என்றார்.
அதுகுறித்துப் பேசிய அமைச்சர் என். ஆனந்த், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தருமபுரி மாவட்டத்துக்கு அனைத்தும் செய்து கொடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.


