புதுடெல்லி: ஈரான் மீது இஸ்ரேலிய, அமெரிக்கப் படைகளின் தாக்குதல் நீடித்துவரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 23,000 கப்பல் ஊழியர்கள் நடுக்கடலில் சிக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய கடல்சார் நிறுவனங்களுடன் இணைந்து விரைவு நடவடிக்கைக் குழு (Quick Response Team) ஒன்றை அமைத்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்றும் அவ்வழியே செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அந்நாடு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்கும் வகையில் வளைகுடா கடல் பகுதிகளில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் ஆதிக்கம் உள்ள நீர்ப்பகுதிகளில் ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதால் இந்திய கப்பல் ஊழியர்களை மீட்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடல்சார் பணியாளர்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த விரைவு நடவடிக்கைக் குழுவை அமைக்க கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ ஷியாம் ஜகநாதன் உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
“ஈரானிலும் பரந்த பாரசீக வளைகுடா நீர்ப்பகுதிகளிலும் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்,” என்று ஸ்ரீ ஷியாம் கூறியுள்ளார்.
இதனிடையே, இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று இந்தியக் கப்பல் ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 36 கப்பல்கள் வளைகுடா கடற்பகுதிகளில் நிலைகுத்தியுள்ளன.
அவற்றுள் இந்திய அரசுக்கு சொந்தமான ஏழு கப்பல்களும் அடங்கும்.

