திருப்பதி: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் இடம்பெற்றுள்ள திருமலையில் அரசியல் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தடையை மீறி அரசியல் பேசிய தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் பிஆர் நாயுடு எச்சரித்துள்ளார்.
இந்துக்களின் புனிதத் திருத்தலமான திருமலைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்க வந்து செல்கின்றனர். இதனால் இந்தத் திருத்தலம் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. ஆதலால், இங்கு எதைச் செய்தாலும் அது உடனடியாக நாடு முழுவதும் பிரபலம் அடைந்து விடுகிறது. இதனை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதனை அறிந்த புதிய அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு, தான் பதவியேற்ற முதல் அறங்காவலர் குழுக் கூட்டத்திலேயே இனி திருமலையில் யாரும் அரசியல் பேசக்கூடாது என்றும், அப்படிப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இது தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஏழுமலையானைத் தரிசித்து விட்டு வெளியே வந்த பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா மாநில முன்னாள் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுட் என்பவர், தெலுங்கானா பக்தர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய மரியாதை வழங்குவதில்லை எனும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும், இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதுபோன்ற பேச்சுகள் திருமலையில் அனுமதிக்கப்படாது என்பதால், ஸ்ரீநிவாஸ் கவுட் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திரு பிஆர் நாயுடு சமூக வலைத்தளம் மூலம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

