பெங்களூரு: சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் (எஸ்ஐஆர்) பிறகு பெங்களூரு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டுள்ளதாகப் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் பிறந்த, படித்த, வளர்ந்த தொகுதியிலேயே, லட்சக்கணக்கான குடிமக்களுடன் சேர்ந்து தனது பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
“பெங்களூரு தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு பெயர்நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நான் பிறந்த, வாழ்ந்த, பள்ளி, கல்லூரியில் படித்த, நாடகப் பயிற்சி பெற்ற தொகுதி இது. உங்கள் தகவலுக்கு, நான் இந்தத் தொகுதியின் எம்.பி. வேட்பாளராகவும் இருந்தேன்,” என்று அந்தக் காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ராஞ்சி நகரில் ஜார்க்கண்ட் மாநிலச் சட்டமன்றத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அரசுப் பணித் தேர்வாணைய விண்ணப்பதாரர்கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசியதற்கும் தடியடி நடத்தப்பட்டதற்கும் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டு, தடியடி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், இந்த கொடூரம் இனி செல்லுபடியாகாது என்றும் இது ஆணவப் போக்கை வீழ்த்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.


