மாமல்லபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் மாணவ மாணவிகளின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார்.
விஜய்யின் இந்தத் திட்டம் மாணவ மாணவிகளிடம் பெருவரவேற்பைப் பெற்று அவர்களிடம் கல்வி ஆர்வத்தைத் தூண்டிவிட்டுள்ளது.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (மே 30) காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
பரிசளிப்பு விழாவில் சென்னை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் 600 பேர் பங்கேற்கின்றனர். 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளும், மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளும் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மாணவ மாணவிகளும் தங்கள் பெற்றோருடன் பங்கேற்பர். விழாவில் கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றுவார்.
பின்னர், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் விஜய் வைரக் கம்மல் அல்லது வைர மோதிரம் பரிசு வழங்குவார் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், கல்வி ஊக்கத்தொகை, விருதுகளை விஜய் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பரிசுபெறவிருக்கும் 600 மாணவ மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தவுள்ளார்.