ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு

தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அண்ணி மீது குற்றச்சாட்டு

ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு

படம்: தி டெய்வி ஜாக்ரான்

10 Apr 2026 - 8:05 pm

2 mins read

மும்பை: தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக அண்ணியிடம் ரூ. 2கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா மோத்வானி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சித் தொடர் நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2022ல் அவர்கள் பிரிந்தனர்.

அப்போது தம்மைக் கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக சித்ரவதைகளை அனுபவித்ததால் தனக்கு முகவாதம் ஏற்பட்டதாகவும் ஹன்சிகா, அவரது அண்ணன், தாயார் ஜோதி மோத்வானி ஆகியோர் மீது நடிகை நான்சி ஜேம்ஸ் காவல்துறையில் புகார் அளித்தார்.

தம் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி ஹன்சிகா ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடனான தனது விவாகரத்தை கடந்த மார்ச் மாதம் ஹன்சிகா முறைப்படி உறுதி செய்தார். தற்போது மும்பை நீதிமன்றத்தில் ஹன்சிகா, 34, சார்பில் அவரது வழக்கறிஞர் ரூபாய் 2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கொடுத்த ரூ.27 லட்சத்தை ஏமாற்றியதாக அண்ணி மீது ஹன்சிகா புகார்

இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“எனது அண்ணனுக்கும் நான்சிக்கும் திருமணம் நடந்தபோது, நான்சியிடம் ரூ.27 லட்சம் கடனாகக் கொடுத்தேன். அந்தப் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றவே, என் மீது நான்சி பொய்யான புகார்களை சமூக ஊடகங்களில் கூறி வருகிறார்.

“என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், பெயர் கெட்டதற்கும் அவர் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுடன், இனிமேல் எனக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்