ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.
கடந்த 2004ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்றபோது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் உடலும் அவருடன் பயணம் செய்த அவரது சகோதரரின் உடலும் கிடைக்கவில்லை.
இச்சம்பவம் நிகழ்ந்து 21 ஆண்டுகள் கழித்து ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிட்டிமல்லு என்பவர், காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, கொலை எனப் புகார் அளித்துள்ளார்.
தனது புகாரில், “நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. அவருக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க நடிகர் மோகன் பாபு முயன்றார். ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய நடிகையின் சகோதரர் அமர்நாத் மறுத்து விட்டார். இந்தச் சூழலில் நடிகை விபத்தில் மாண்டார்,” எனச் சிட்டிமல்லு கூறியுள்ளார்.
“மேலும், நடிகையின் மரணத்திற்குப் பிறகு சட்டவிரோதமாக மோகன் பாபு அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார். எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும்,” என தமது மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மோகன் பாபுமீது சமூக ஆர்வலர் வைக்கும் குற்றச்சாட்டை சௌந்தர்யாவின் கணவர் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் மோகன் பாபுவுக்கும் எனது மனைவியின் மறைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக மோகன் பாபுவை நான் அறிவேன். நாங்கள் நல்ல நட்புறவில் இருக்கிறோம். தவறான செய்தியைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

