மும்பை: இந்தியாவின் முன்னணித் தொழில் குழுமமான அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் ‘அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், அனைத்துலக முதலீட்டாளர்களிடம் இருந்து, S$1.3 பில்லியன் நிதியாகத் திரட்டவுள்ளது.
இந்நிறுவனத்தின் 5.54 விழுக்காட்டுப் பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் இந்த நிதி திரட்டப்படுகிறது.
இதில் சிங்கப்பூரின் அரசு முதலீட்டு நிறுவனமான தெமாசெக், அமெரிக்காவின் பிரபல பிளாக்ராக் நிர்வாக நிதி, ஆல்ஃபா வேவ், பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பு முதலீடு செய்கிறது.
இந்தப் பங்கு விற்பனையின்மூலம், அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போதைய நிலையில் S$ 22.8 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
திரட்டப்படும் நிதியானது, மூன்று தவணைகளாகப் பெறப்படும் என்றும் இதன் இறுதித் தவணை ஜூலை 2027க்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி ஏர்போர்ட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் முதல் வெளிநாட்டு முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நீதித் துறை எழுப்பிய லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு கண்டதையடுத்து, அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதானி குழுமம் மீண்டும் பெற்று வருவதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது.
இந்தியாவில் அதிக விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக அதானி ஏர்போர்ட் திகழ்கிறது. நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையம் உட்பட மொத்தம் எட்டு விமான நிலையங்களை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 9.6 கோடி (96 மில்லியன்) பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தப் புதிய முதலீட்டின் மூலம் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சேவைத்திறனை விரிவாக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


