தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் பெரும் அமளி

1 mins read
8aa0ec9c-9cb4-466d-8ade-eb5650635473
16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்க அரசாங்கம் லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்திய விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (நவம்பர் 25) காலை தொடங்கியதும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 11 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். மக்களவையும் அதேபோல ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், வஃக்ப் வாரிய மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

75வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், நாடாளுமன்ற இரு அவைகளின் அமர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீண்டகாலக் கடன்களைத் திருப்பிச் செலுத்த அடுத்த 28 மாதங்களுக்குத் தேவையான ரொக்கக் கையிருப்பு தன்னிடம் இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்