அதானி வழக்கில் இந்திய சட்ட உதவி கோரும் அமெரிக்கா

2 mins read
6fcbab47-8027-4394-a13e-efdeeb7eee92
தொழிலதிபர் கெளதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர் மீதான லஞ்ச வழக்கில் இந்திய அரசின் உதவியை அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் (SEC) கோரியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

நியூயார்க்: தொழிலதிபர் கெளதம் அதானி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம், நீதி அமைச்சின் உதவியைக் கோரியுள்ளதாக நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய சக்தி, மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக, 2024 நியூயாா்க் நீதிமன்றத்தில் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தி விநியோகத் திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள், முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கு சுமாா் ரூ.2,200 கோடிக்கு (யுஎஸ் 265 மில்லியன் டாலர்) மேல் லஞ்சம் வழங்கப்பட்டது அமெரிக்க வங்கிகள், முதலீட்டாளா்களிடம் மறைக்கப்பட்டு மோசடி நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதில், வெளிநாடு லஞ்ச முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘இந்திய தொழிலதிபா் கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளைத் தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் தொழிலதிபர் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட எழுவரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் கௌதம் அதானி, உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்