புதுடெல்லி: இந்தியப் பெருஞ்செல்வந்தர் கௌதம் அதானிக்குச் சொந்தமான ‘ஏசிசி’ சிமென்ட் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை ரூ.23.07 கோடி (S$3.44 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2015-16, 2018-19 நிதியாண்டுகளில் ஈட்டிய வருமானத்தைக் குறைத்துக் காட்டியதற்காக முறையே ஏசிசி நிறுவனத்திற்கு ரூ.14.22 கோடி மற்றும் ரூ.8.85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அபராதங்களையும் எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையீடு செய்யவிருக்கிறது.
அதானி 50 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருக்கும் அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமே ஏசிசி.
கடந்த 2022 செப்டம்பரில் சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் குழுமத்திடமிருந்து 6.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$8.25 பில்லியன்) அம்புஜா சிமென்ட் நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனமான ஏசிசியையும் அதானி குழுமம் வாங்கியது.
அண்மையில் வெளியான ஆண்டறிக்கையின்படி, 2025ஆம் நிதியாண்டில் ஏசிசி நிறுவனம் 39 மில்லியன் டன் சிமென்ட் விற்பனை மூலம் ரூ.21,762 கோடி வருமானம் ஈட்டியது தெரியவந்துள்ளது.