புதுடெல்லி: இலங்கையின் வடபகுதியில் தொடங்கப்படவிருந்த காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திலிருந்து இந்தியாவின் அதானி கிரீன்ஸ் நிறுவனம் விலகிவிட்டது.
அந்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவது, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சட்டப்போராட்டம் நடந்துவரும் நிலையில், அதிலிருந்து விலகும் முடிவை அதானி நிறுவனம் எடுத்துள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, தேர்தல் பரப்புரையின்போது அந்தக் காற்றாலை மின்சாரத் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்திருந்தார்.
ஆயினும், அவரது தலைமையில் அரசு அமைந்ததும், அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக இலங்கை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்திலிருந்து விலகுவதாக புதன்கிழமை (பிப்ரவரி 12) அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. ஆயினும், அந்நாட்டின் இறையாண்மைக்கும் அதன் விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில், அத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அதானி குழுமம் முடிவு செய்துள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.
அந்தக் காற்றாலைத் திட்டத்திற்கு 442 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.