தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதானி லஞ்ச ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை

2 mins read
79c2dd1a-a7b3-453f-a68e-f37f93bfd411
காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்கக் குற்றவியல் துறை, கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர், அமெரிக்காவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அதிகாரிகளுக்கு 26.5 கோடி டாலர் லஞ்சம் கொடுத்து, 20 ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் ஒப்பந்தங்களை அவர்கள் பெற்றதாகக் அது குற்றம் சாட்டியுள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2,100 கோடி லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும் அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளைப் பெற்றதாகவும் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “கடந்த ஜனவரி 2023 முதல் அதானியின் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது,” என்றார்.

மேலும், “பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானிக்கும் இடையேயான தொடர்பு குறித்துப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை,” என்றும் அவர் கூறினார்.

“இப்போது அதானியின் முறைகேடுகளை விசாரிக்க வெளிநாட்டு அரசு முன்வந்திருப்பது, இந்திய நிறுவனங்கள் பாஜக அரசால் கைப்பற்றப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதானியின் முறைகேடு குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்,” என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியால் அதானிமீது நடவடிக்கை எடுக்க முடியாது: ராகுல் காந்தி

சூரிய சக்தி ஒப்பந்தத்திற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கௌதம் அதானி மற்றும் அவரது சகாக்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டியது முக்கியம். ஆனால், அதைக்காட்டிலும் அதானி இப்போது ஏன் சிறையில் அடைக்கப்படவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி. அவர் இந்தியாவில் குற்றம் செய்துள்ளார், லஞ்சம் கொடுத்துள்ளார், அதிக விலைக்கு மின்சாரம் விற்றுள்ளார் என்று அமெரிக்க ஏஜென்சி கூறியுள்ளது.

அதானி மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவ்வாறு அவர், அதானி மீது நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் அதானியின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி இருப்பதால் அது முடியாது.

இந்த ஊழலுக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதானியை அவர் பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்கள் இந்தப் பிரச்சினையை எழுப்புவோம். எதிர்க்கட்சித் தலைவராக இந்தப் பிரச்சினையை எழுப்புவது என் கடமை.

அதானி உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். ஆனால், பிரதமர் மோடி அதானியைப் பாதுகாப்பதில் முனைப்புக் காட்டுகிறார். எனவே, அவர் கைது செய்யப்பட மாட்டார் அல்லது விசாரணையை எதிர்கொள்ள மாட்டார். இந்தியாவில் ஊழல் மூலம் சொத்துகளைச் சம்பாதித்துள்ளார். பாஜகவுக்கு அதானி ஆதரவு அளித்து வருவதாக ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்