6,000மெகாவாட் பசுமை எரிசக்தி திட்டம்: அதானிக் குழுமத்திற்கு ஜப்பான் உதவி

6,000மெகாவாட் பசுமை எரிசக்தி திட்டம்: அதானிக் குழுமத்திற்கு ஜப்பான் உதவி

2 mins read
d7552983-1e29-4d3c-b95d-31581bd12b65
60 மில்லியன் இந்தியக் குடும்பங்களின் மின்சக்தித் தேவையை பூர்த்தி செய்யும் இலக்குடன்கூடிய அதானி குழுமத்தின் பிரம்மாண்ட பசுமை எரிசக்தி திட்டத்திற்கு ஜப்பானிய நிதியுதவி கிடைத்துள்ளது. - கோப்புப் படம்: ஹவ்சிங்.காம்

ஏறத்தாழ 60,000 மில்லியன் குடும்பங்கள் பலன்பெறும் வகையிலான பிரம்மாண்ட பசுமை எரிசக்தி திட்டத்திற்கான நிதியைக் கைப்பற்றியுள்ளது அதானிக் குழுமம்.

‘அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்’ எரிசக்தி நிறுவனம், 6,000 மெகாவாட் பசுமை எரிசக்தி வழித்தடம் தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்டகால நிதியுதவியை ஜப்பானிடமிருந்து பெற்றுள்ளதாக திங்கள்கிழமை (பிப்ரவரி 9)  அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த மின்மாற்றத் திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின் கட்டமைப்புக்கு கொண்டு செல்லும்.

மேலும் இந்தியா முழுவதும் அதிகளவிலான மின்சாரத் தேவைகள் உள்ள பகுதிகளுக்கு மின்சக்தி சென்றடைவதை இத்திட்டம் சாத்தியப்படுத்தும் என்று அதானிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.

இதன் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி ’’வட இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் வளர்ந்து வரும் தேவைகளை சந்தித்து அவற்றை ஆற்றல்மிக்க வகையில் ஆதரிப்பதற்காக இந்த திட்டம் பசுமை வெளியேற்ற வழித்தடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,’’ என்றும் குழுமம் தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றும் ஏறத்தாழ 2029ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், மில்லியன் கணக்கான இந்திய இல்லங்கள் தடையில்லா மின்வசதி பெறும் என்றும் அறிக்கை நம்பிக்கை தெரிவித்தது.

இத்திட்டத்தின் மூலம் கட்டமைக்கப்படவுள்ள வழித்தடம் சுமார் 950 கி.மீ. நீளம் கொண்ட பசுமை எரிசக்தி தடமாக அமையும். 

ராஜஸ்தானில் உள்ள பத்லாவையும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஃபதேபூரையும் இணைக்கும் இந்த வழித்தடம் துரிதமாக வடிவமைக்கப்பட்டு, சில ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்திட்டம் வட இந்திய மாநிலங்களை பேரளவிலான பசுமை மின்சக்தி ஆற்றல் கொண்ட மையங்களாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதியுதவி குறித்து கருத்துரைத்தார் அதானிக் பசுமை எரிசக்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கன்டார்ஃப் பட்டேல்.

‘‘பசுமை எரிசக்தி திட்டம் தொடர்பிலான இந்தியாவின் கொள்கைக்கான அடிநாதமாக இத்திட்டம் திகழும். இத்திட்டத்திற்கான நிதியாதரவு வழங்கும் ஜப்பானின் பங்காளித்துவத்தால், இருதரப்புக்கும் இடையேயான நல்லுறவு மேலும் விரிவாகும்.

‘‘நீடித்த எரிசக்தி, கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்த மேம்பாடுகள் புதிய முன்னேற்றத்தை அடையும்,’’ என்று திரு பட்டேல் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்