சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அதானி பசுமை எரிசக்தித் திட்டம் மறுஆய்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அதானி பசுமை எரிசக்தித் திட்டம் மறுஆய்வு

படம்: இண்டியன் எக்ஸ்பிரஸ்

18 Nov 2026 - 6:53 pm

1 mins read

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்தாரா மாவட்டம், தரளி பகுதியில் அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் அமைக்கவுள்ள 1,500 மெகாவாட் நீரேற்று புனல் மின்சாரத் திட்டம் குறித்து மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் கடந்த செவ்வாய்க்கிழமை மறுஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

சுற்றுச்சூழல் பாதிப்புச் செலவை அந்நிறுவனம் குறைத்து மதிப்பிட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சகயாத்ரி புலிகள் காப்பகம் மற்றும் கொய்னா சரணாலயப் பாதுகாப்புத் திட்டத்திற்கான செலவில் 4 விழுக்காடு தொகையைக் கோரிய வனத்துறையின் கடிதத்தை அரசாங்கம் திரும்பப் பெறப் பரிசீலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் மொத்த மூலதனச் செலவு 5,675 கோடி ரூபாய் என்றும் முன்னதாகக் குறிப்பிடப்பட்ட 56.75 கோடி ரூபாய் என்பது நில அளவை மற்றும் முதற்கட்ட ஆய்வுப் பணிகளுக்கான செலவு மட்டுமே என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மாநில வனவிலங்கு வாரிய ஒப்புதல் பெற்ற இப்பணிகளுக்காக ஒரு விழுக்காடு தொகை ஏற்கெனவே அரசாங்கத்திடம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

அதானி நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வனத்துறையின் பரிந்துரைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையே சமநிலையைப் பேணுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்புச் சொற்கள்