காற்றாலை மூலம் வரும் எரிசக்தியைப் பெருக்க அதானி குழுமம் திட்டம்

காற்றாலை மூலம் வரும் எரிசக்தியைப் பெருக்க அதானி குழுமம் திட்டம்

2 mins read
e8f67eed-4547-4b8c-8ba6-ba0fa231c05f
இந்தியா, அதன் காற்றாலைகளுக்காக 91.2 மீட்டர் நீளமுடைய இறக்கைகள் கொண்ட காற்றாடிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. - படம்: த இந்து

புதுடெல்லி: இந்தியா, அதன் காற்றாலைகளுக்காக 91.2 மீட்டர் நீளமுடைய இறக்கைகள் கொண்ட காற்றாடிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

அதானி நியூ இன்டஸ்டிரிஸ் லிமிடட் நிறுவனம், குஜராத்தில் உள்ள முந்த்ரா காற்றாலையின் எரிசக்தி உற்பத்தியைப் பெருக்க முயல்வதை அடுத்து நீளமான காற்றாடி இறக்கைகள் உருவாக்கப்படுகின்றன.

எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட புதிய காற்றாடிகளில் அந்த இறக்கைகள் பொருத்தப்படும். அவை குறைவான, மிதமான காற்று வீசும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் பயன்படுத்தப்படும்.

அதானியின் முந்த்ரா ஆலை தற்போது 78.6 மீட்டர் நீளத்திலும் 80.5 மீட்டர் நீளத்திலும் இறக்கைகள் கொண்ட காற்றாடிகளைத் தயாரிக்கின்றன.

பெரிய காற்றாடி இறக்கைகளால் கூடுதல் காற்றை எரிசக்தியாக மாற்ற முடியும். 91.2 மீட்டர் காற்றாடி இறக்கையால் ஏறக்குறைய 26,600 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றை இயற்கை எரிசக்தியாக மாற்ற முடியும்.

பெரிய காற்றாடி இறக்கைகள் மூலம் 5 மெகாவாட்டிற்கும் அதிகமான எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

முந்த்ராவில் உள்ள அதானி இறக்கைகள் உற்பத்தி ஆலை ஆண்டுதோறும் தற்போது 2.25 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அதாவது ஆண்டுதோறும் 450 இறக்கைகளை அது தயாரிக்கிறது.

அந்த எரிசக்தி உச்சவரம்பைப் படிப்படியாக 5 கிகாவாட்டிற்கு உயர்த்த அதானி குழுமம் திட்டமிடுகிறது. காலப்போக்கில் அதை 10 கிகாவாட்டிற்கு அதிகரிக்கவும் திட்டமுள்ளது.

முந்த்ரா ஆலை பலவிதமான தொழில்நுட்பத்தைக் கொண்டு இயற்கை எரிசக்தியை உற்பத்தி செய்யும் நடுவமாக மாற முற்படுகிறது. அதை முன்னிட்டு காற்றாலை உற்பத்தியில் அதானி குழுமம் ஏறக்குறைய 3,000 கோடி ரூபாயைச் செலவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்