ஆசியாவின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் அதானி

இரண்டாம் இடத்துக்குச் சென்ற அம்பானி

ஆசியாவின் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் அதானி

2 mins read
3141401f-9fc4-498d-a016-2a36a2a986d5
புளூம்பர்க் தரவுகளின்படி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 92.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட புளூம்பர்க்கின் பெரும் செல்வந்தர்கள் தரவரிசைப் பட்டியலின்படி, 92.6 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தை அதானி பிடித்துள்ளார்.

அதேவேளையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டாலராகக் குறைந்து 20வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதானி குழுமப் பங்குகள் இந்த ஆண்டு $8.1 பில்லியன் டாலர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், அம்பானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $16.9 பில்லியன் டாலர் சரிவைச் சந்தித்துள்ளதே இந்தத் தரவரிசை மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கம், எரிசக்தி மாற்றம் தொடர்பான பங்குகள் உயர்ந்ததே இதற்குக் காரணம். கடந்த ஆண்டில் அதானி குழுமத்தின் பங்குகள் பல மடங்கு வளர்ச்சி கண்டன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அதானி, அம்பானிக்கு அடுத்து இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் வரிசையில், லட்சுமி மிட்டல் ($36.9 பில்லியன்), ஷிவ் நாடார் ($33.5 பில்லியன்), ஷாபூர் மிஸ்திரி குடும்பம் ($33.2 பில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் உலகச் சந்தைகளில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இந்தியாவின் முன்னணிச் செல்வந்தர்கள் இந்த ஆண்டில் இதுவரை மொத்தமாக $28.1 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளனர்.

ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் வரிசையில் $50.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் குவாக் குடும்பம் உள்ளது. மூன்றாவது இடத்தில், $45.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சாம்சங் குழுமத்தின் சொந்தக்காரர்களான தென்கொரியாவின் லீ குடும்பம் பிடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்