சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல சென்னை-கொச்சி இடையே கூடுதல் விமானச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல சென்னை-கொச்சி இடையே கூடுதல் விமானச் சேவை

2 mins read
fc1b5b99-ce8b-4ff1-9a50-60afdad0607e
இந்த ஆண்டு விமானங்களில் பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

ஆலந்தூர்: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி, தை முதல் நாள் வரை மகர ஜோதியைக் காணச் செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் சபரிமலையில் திறக்கும் நடையை மகரஜோதி வரை குறிப்பிட்ட காலங்களில் மட்டும் திறப்பார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் இருமுடியுடன் செல்ல இந்திய விமான நிலைய ஆணையகம், விமான ஆணையகப் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்து உள்ளது.

இதனால் ஐயப்ப பக்தர்கள் தற்போது, விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாகத் தினமும் ஐந்து புறப்பாடு, ஐந்து வருகை என 10 விமானச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சபரிமலை நடைத் திறப்புக்காக ஏழு புறப்பாடு விமானங்கள், ஏழு வருகை விமானங்கள் என 14 விமானச் சேவைகள் இயக்கப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சென்னையில் இருந்து கொச்சிக்கு எட்டு புறப்பாடு விமானங்கள், கொச்சியில் இருந்து சென்னைக்கு எட்டு வருகை விமானங்கள் என விமானச் சேவை அதிகரித்து உள்ளது.

மேலும் சென்னை- பெங்களூரு- கொச்சி இடையே இணைப்பு விமானங்களாகத் தினமும் மூன்று புறப்பாடு விமானங்கள், மூன்று வருகை விமானங்கள் என மொத்தம் ஆறு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.45 மணிக்கு சென்னை- கொச்சிக்கு இடையே நேரடி விமானச் சேவையும் உள்ளது. இந்த ஆண்டு விமானங்களில் பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து இரவு 9.25 மணி வரையில், எட்டு புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணி முதல் இரவு 11.05 மணி வரையில் எட்டு வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானச் சேவை ஐயப்ப பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவைசபரிமலைகொச்சி