விஜயநகரம்: இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமான நிலையங்களை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் விமானப் பயணிகளின் எண்ணிக்கைப் பெருகி வருவதைக் கவனத்தில் கொண்டு, விமான நிலையங்கள் தொடர்பாக சில விதிகளைத் தளர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார் அவர்.
ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு அனைத்துலக விமான நிலையத்தின் முதல் விமானச் சோதனை ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) பார்வையிட்ட பின்னர் அந்நிகழ்வில் அவர் பேசினார்.
முக்கியமாக, 150 கிலோமீட்டர் தூரத்துக்கு இடையில் இரண்டு விமான நிலையங்கள் இருப்பதைத் தடுக்கும் விதி குறித்து ஆராயப்படும் என்றார் ராம்மோகன்.
குறுகிய தூரத்தில் இரு விமான நிலையங்கள் இருக்கலாம் என்ற அவர், புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து 42 கிலோமீட்டர் தூரத்தில் உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் விமான நிலையம் கட்டப்பட்டு வருவதை அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டினார்.
மேலும், சென்னையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கான பணிகளை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலும் புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்றும் ராம்மோகன் கூறினார்.
“நடப்பில் உள்ள விமான நிலையங்கள் அளவுக்கு அதிமான பயணிகளைக் கையாளும் நிலை ஏற்படும்போது புதிய விமான நிலையம் கட்டுவதற்காக அளிக்கப்படும் யோசனை ஏற்றுக்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“பொருளியலுக்கு உதவவும் ஏராளமானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைகளை உருவாக்கவும் புதிய விமான நிலையங்களை எழுப்புவதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சு முன்னுரிமை அளிக்கிறது.
“அத்துடன், பயன்பாட்டில் இருந்துவரும் விமான நிலையங்களை புதுப்பிக்கவும் அது நடவடிக்கைகளில் ஈடுபடும்,” என்றும் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராம்மோகன் தெரிவித்தார்.

