மேற்கு வங்கத்தில் கூடுதல் துணை வாக்குச்சாவடிகள் அறிமுகம்

மேற்கு வங்கத்தில் கூடுதல் துணை வாக்குச்சாவடிகள் அறிமுகம்

2 mins read
528ba9ed-8416-4b13-aaf3-0dfa0a71031b
மேற்கு வங்கத்தில் 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். - கோப்புப் படம்: அல்ஜசீரா

கோல்கத்தா: இந்தியாவின் தேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளை அமைக்க சனிக்கிழமை (ஏப்ரல் 4) ஒப்புதல் அளித்துள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக அந்தத் துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக ஆணையம் சொன்னது.

1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

மேலும், 321 வாக்குச்சாவடிகளின் இடங்களை மாற்றுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 85,379ஆகிறது.

வாக்குச்சாவடிகளின் இடம் மாற்றப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் வாக்காளர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும் என்று மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஆணையத்தின் செயலாளர் சுஜீத் குமார் மி‌ஷ்ரா கடிதம் எழுதினார்.

வாக்களிப்பு நடைமுறைகள் அனைத்தும் தடையின்றி, நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறவேண்டும் என்று கோல்கத்தாவின் காவல் ஆணையர், தலைமைச் செயலாளர், காவல்துறையின் தலைமை இயக்குநர் ஆகியோருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானே‌ஷ் குமாரும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாதுவும் விவேக் ஜோ‌ஷியும் உத்தரவிட்டுள்ளனர்.

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகியவற்றுடன் ஆறு மாநிலங்களிலும் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு 2,18,807 வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் உறுதிசெய்யப்படும்படியும் வாக்களிப்பு நாளில் வாக்காளர்களுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும்படியும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

குடிநீர், காத்திருக்கும் இடங்களில் நிழல், கழிவறைகள், விளக்குகள், உடற்குறையுள்ளோருக்கான சாய்வுத்தளங்கள் ஆகியவை அடிப்படை வசதிகளில் அடங்கும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் உதவிக் கூடங்களும் அமைக்கப்படும். அத்துடன் வாக்காளர்கள் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வசதிகளும் வாக்களிப்பு நிலையங்களில் அமைக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 29ஆம் தேதிவரை வாக்களிப்பு இடம்பெறும். வாக்குகள் அனைத்தையும் மே 4ஆம் தேதி எண்ணுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்