மத்தியப் பிரதேசத்தில் விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குக் கூடுதல் இழப்பீடு

1 mins read
8fa393f9-0d2e-4a10-8c27-cdc17f583316
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ். - படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

போபால்: மத்தியப் பிரதேச மாநில அரசு, காட்டு விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

உமரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே யானைகள் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மோதல் நிகழும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதனால், ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு இதுவரை ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிவாரணத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது,” என்று கூறினார்.

உமரியா மாவட்டத்தில் அண்மையில் யானைகள் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

பாந்தவ்கர் புலிகள் காப்பகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தைச் சேர்ந்த ராம்ரத்தன் யாதவ் (50) என்பவர் காட்டு யானை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார். பின்னர் அதே யானை, பிராகி கிராமத்தைச் சேர்ந்த பைரவ் கோல் (35) என்பவரையும் தாக்கிக் கொன்றது. இந்தச் சம்பவத்தில் பங்கா கிராமவாசியான மாலு சாகு (32) என்பவர் பலத்த காயமடைந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்