வாரணாசி: இந்துக்களின் புனித நகராக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கு சிவராத்திரியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி உள்ளது காவல் துறை.
கங்கையில் நீராடுவதற்காகவும் காசி விஸ்வநாதரை தரிசிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் புதன்கிழமை (பிப்ரவரி 26) சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் செய்து உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவரும், வாரணாசி துணை காவல் ஆணையருமான சரவணன் கூறியபோது, “வாரணாசி நகரை பொறுத்தவரையில் 27 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இங்கு முக்கியமான நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, வடமாநிலங்களில் இருந்து 22 லட்சம் மக்கள் வருகை தருவார்கள். அவர்கள் அனைவருக்கும் வசதிகளை நாங்கள் செய்து கொடுத்து வருகிறோம்.
“குறிப்பாக சிவராத்திரி நாளில் 50 லட்சம் மக்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காக சில சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
“வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாரணாசி நகருக்கு 30 கிலோ மீட்டருக்கு வெளியே நிறுத்தப்படும்.
“அங்கு வாகனங்கள் நிறுத்த, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
“வாரணாசியின் புறநகர்ப் பகுதியில் இருந்து கோவிலுக்கும் கங்கை நதிக்கும் பேருந்துகளில் இலவசமாக அழைத்துச் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“அதைப்போல் வயதானவர்கள், நோயாளிகள் கோவில் செல்வதற்கு சிறப்பு வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
“அதற்காக சுமார் 10 ஆயிரம் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக படித்துறைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
“இங்கு 84 படித்துறைகள் உள்ளன. அதில் 21 படித்துறைகளில் பொதுமக்கள், பக்தர்கள் அதிகம் நீராடுவார்கள். எனவே கங்கை கரையிலும் அதிகமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன,” என்று அவர் கூறினார்.

