மதுரை: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிக அரசுப் பணி வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் விஜய் கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன், வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அதற்கான மனுவைத் தாக்கல் செய்தனர்.
“தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
“எனவே சிபிஐ விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு வெள்ளிக்கிழமை (ஜூலை 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணையின் தொடக்கத்திலேயே, “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளியல் உதவி தேவைதானே, அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?,” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கும்போது, “பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு,” என்றார்.
மேலும், “அரசின் கொள்கைகளில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. ஆனாலும், நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிகப் பணி வழங்கலாம்,” என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

