புதுடெல்லி: குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருந்த பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சின் வழிகாட்டுதலின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு புதன்கிழமை (மே 28) அறிவித்தது.
அதனால் ‘ஆப்பரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுகிறது என ஹரியானா அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. சண்டிகர் நிர்வாகமும் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைத்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
ஹரியானாவில் வியாழக்கிழமை (மே 29) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை நடத்த தீர்மானிக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு முன்னோட்டமாக, இம்மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது போர் ஏற்பட்டால் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

