300 வேட்பாளர்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றவழக்குகள்: ஏடிஆர் அறிக்கை

300 வேட்பாளர்கள்மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றவழக்குகள்: ஏடிஆர் அறிக்கை

2 mins read
கேரளத் தேர்தல்: 863 வேட்பாளர்களில் 339 பேர் கோடீஸ்வரர்கள்
d4ea1c33-b2ae-4b4e-bbbe-ccb60acbb16b
கேரளாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் கொடிகள். - படம்: மனோரமா

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஏறக்குறைய 38 விழுக்காட்டினர் தங்கள்மீது குற்றவழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் 39 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) சனிக்கிழமை (ஏப்ரல் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 863 வேட்பாளர்களின் உறுதிமொழி ஆவணங்களை ஆய்வு செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

குற்றப்பின்னணி

மொத்தம் 324 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன. இதில் 201 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

15 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகளை எதிர்கொள்கின்றனர். இவர்களில் ஒருவர்மீது தொடர் பாலியல் வன்கொடுமை வழக்கும் நான்கு பேர் மீது கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன.

கட்சிகள் வாரியாக

காங்கிரஸ் கட்சியில் 85 வேட்பாளர்களில் 72 பேர் மீதும் பாஜகவில் 93 வேட்பாளர்களில் 59 பேர் மீதும் சிபிஎம் கட்சியில் 77 வேட்பாளர்களில் 51 பேர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன.

குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும்போது, அதற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் விளக்கவேண்டும் என 2020ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மக்களிடையே பிரபலமாக விளங்குவது, சமூக சேவைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட காரணங்களைக் கூறி கட்சிகள் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாக ஏடிஆர் அறிக்கை விமர்சித்துள்ளது.

பணபலம்

தேர்தலில் பண பலம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, 863 வேட்பாளர்களில் 339 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய அரசியல் கட்சிகள், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்