உள்நாட்டு ஏஐ பங்களிப்பால் பாதுகாப்பு அமைப்பில் முன்னேற்றம்: அஸ்வினி வைஷ்ணவ்

2 mins read
f03afa8e-9d07-40ae-a6bd-0307117f4e0d
அஸ்வினி வைஷ்ணவ். - படம்: பிசினஸ் டுடே

டாவோஸ்: ஏஐ தொழில்நுட்பத்தில் உள்நாட்டுப் பங்களிப்பால் இந்திய பாதுகாப்புத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளியல் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அண்மையில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் அற்புதமான முடிவுகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தொடர்பாக பிற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது என்றும் இத்தொழில்நுட்பத்தில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஏஐ துறையில் இந்தியாவின் அணுகுமுறை பரந்து விரிந்தது என்று குறிப்பிட்ட திரு அஸ்வினி வைஷ்ணவ், ஏஐ கட்டமைப்பு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது என்றும் அவை அனைத்திலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளுடன்தான் இந்தியாவை ஒப்பிட வேண்டும் என்றும் இரண்டாம் நிலை நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு கூட்டத்துக்கு இடையே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அனைத்துலக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

மேலும், மெட்டா நிறுவனத்தின் அனைத்துலக விவகாரங்களின் தலைமை அதிகாரியான ஜோயல் கப்லானை சந்தித்தபோது, ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள், காணொளியில் இருந்து சமூக ஊடகப் பயனாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திரு அஸ்வினி வலியுறுத்தினார்.

என்டிடிவி ஊடகத்துக்கு அளித்த விரிவான நேர்காணலின்போது இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் இலக்குகளை அடைய முக்கியப் பங்காற்றி உள்ளது என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஏஐ அமைப்புகள் பயன்பாடு குறித்து இந்திய அரசு அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனினும் அந்தப் போர் நடவடிக்கைக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு அல்லது செயல்படுத்தலில் உள்நாட்டு தொழில்நுட்பம் திரைக்குப் பின்னால் முக்கியமான பங்களிப்பைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அதை தற்போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்