பெங்களூரு: சட்டவிரோதச் சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக திரைப்பட நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதச் செயலிகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பணத்தையும் மன நிம்மதியையும் இழந்து, கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்த ஒரு தரப்பினர் முன்னணி நடிகர்கள், பிரபல விளையாட்டு வீரர்களைப் பயன்படுத்துகின்றனர்.
இதைத் தடுக்க, சூதாட்டச் செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும் ஊக்கப்படுத்துவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோதச் சூதாட்டச் செயலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளிப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் அமைச்சு உத்தரவிட்டு இருந்தது. இணையம் மூலம் செய்யப்படும் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதச் சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் அனைவருக்கும், விசாரணைக்காக நேரில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.