லக்னோ: தனியார் நிறுவனங்கள் கோயில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் தெரிவித்து உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி கோயில் தலைமை பூசாரி கூறுகையில், “கோயிலின் பூசாரிகள் மேற்பார்வையில்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அதேபோல் நாடு முழுவதும் கோயில்களுக்கு காணிக்கையாக வழங்கப்படும் எண்ணெய் மற்றும் நெய்யின் தரத்தை ஆராய வேண்டும்.
“கோயில்களின் புனிதத்தன்மையைக் கெடுக்க அனைத்துலக அளவில் சதி நடப்பதாக சந்தேகப்படுகிறேன்,” என்றார்.