புதுடெல்லி: சிறார்களின் ‘ஆதார்’ விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.
தற்போது ஐந்து வயதுக்கும் கீழ் உள்ள சிறார்களுக்குப் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதார் எண் வழங்கப்படுகிறது. அவர்கள் ஐந்து வயதைத் தாண்டும்போது ஆதாருடன் கருவிழி, கைரேகைப் பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஐந்து முதல் ஏழு வயதிற்குட்பட்ட சிறார்களை அருகில் உள்ள சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று, அவ்விவரங்களை இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்களைப் புதுப்பிக்க ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவர்களின் ஆதார் அட்டை செயலிழந்துபோகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்பு தொடர்பில் சிறார்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.