புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து செப்டம்பர் 21ஆம் தேதி காலை புறப்பட்ட விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்தப்படி, 13 வயதுச் சிறுவன் புதுடெல்லி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானின் ‘காம் ஏர்லைன்ஸ்’ என்ற தனியார் விமானச் சக்கரத்தின் உள்ளே அமர்ந்திருந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணித்து அச்சிறுவன் புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தார்.
விமானம் தரையிறங்கியதும் செய்வதறியாது தவித்த சிறுவன், அந்த விமானத்தைச் சுற்றி வந்தார். அவரை விமான நிறுவன ஊழியர்கள் பிடித்து விசாரித்ததில், ஆப்கானின் குண்டூஸ் நகரைச் சேர்ந்த அச்சிறுவன், விமானத்தின் பின் சக்கரத்தின் உள்பகுதிக்குள் பதுங்கி இந்தியா வந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் விமான நிலைய ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அச்சிறுவனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரிடமிருந்த சிவப்பு நிற ஒலிப் பெருக்கியைப் பறிமுதல் செய்தனர்.
அவர் பயணித்த விமானத்தை முழுமையாகச் சோதனையிட்ட அதிகாரிகள், சதிச் செயலுக்கான எந்தவொரு அறிகுறிகளையும் கண்டறியவில்லை.
அதனால், அச்சிறுவனைக் காபூல் நகருக்குப் புறப்பட்ட அதே விமானத்தில் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பினர்.